Sunday 2 May 2010

மனிதம் கடவுளின் அற்புதப் படைப்பு -பாகம் -1

வாழ்க்கைஎன்றால் போராட்டம்தான். இந்த போராட்டமானது மனிதனுடைய சமநிலையை தடுமாற வைக்கிறது . குடும்பம், உறவுகள் , நண்பர்கள் , பணி, தேவைகள் , ஆசைகள் ஆகியவைகள் ஒன்றாக இணைந்து உருவாகியது தான் மனிதனுடைய வாழ்க்கை . இவைகளுக்கிடையில் சிக்கித் தவிக்கும் போதுதான் தன்னுடைய சமநிலையை இழக்க நேரிடுகிறான் . மனிதன் , ஒன்றில் கவனத்தை செலுத்தி மற்றவையில் அக்கறை காட்டத் தவறினால் ஏதாவதொரு பிரச்சனயை வெகு விரைவில் சந்திக்கிறான் . இந்நேரத்தில் எந்தப் பிரச்சனையால் குழப்பப்பட்டு விடுவோமோ என்ற எண்ணத்தில் மூழ்கிய மனிதன் எளிதில் சோர்வடைகிறான் . எல்லை மீறிய சோர்வானது மனிதனுக்கு பைத்தியத்தின் ஆரம்ப காலகட்டத்தை நினைவுப் படுத்துகிறது .

வாழ்க்கை என்பது எதிர்நீச்சல் என்ற தத்துவத்தோடு வாழக் கற்றுக் கொண்டால் , மனிதனுடைய நிலையானது ஒரு பெரிய மரத்தின் வேரினைப் போல எந்த புயலுக்கும் அஞ்சாமல் , அசையாமல் நிமிர்ந்து தைரியத்தோடு எதையும் சமாளித்து கொள்ளுகிறது . மனிதனுடைய வாழ்க்கை என்பது காலச் சக்கரம் , அது யாருக்காகவும் , எதற்காகவும் நிற்பதில்லை , அது ஓடிக்கொண்டே இருக்கிறது . மனிதனும் வாழ்க்கை சக்கரத்தை சூழ்நிலைக்கு தகுந்தால்போல மாற்றிக் கொண்டு வாழ்ந்து காட்ட வேண்டும் . பிரச்சனைகளும் , போராட்டமும் நிறைந்தது தான் மனித வாழ்க்கை . இடிதாங்கி போல அனைத்தையும் சகித்துக் கொண்டு பொறுமையோடு அந்தப் பிரச்னைக்கு தீர்வு காணும் மனிதன் ஒரு நிலையான வாழ்க்கையை ஏற்ற்று , காலச்சக்கரத்தின் பாதையோடு தன்னுடைய வாழ்க்கை பாதையை சமமாக சீர்படுத்திக் கொள்கிறான் .

மனிதனுடைய மனத்திலிருந்து பல்லாயிரக்கணக்கான எண்ணங்கள் பிறக்கின்றன. அவை அனைத்திற்கும் செயல்வடிவம் கொடுக்க இயலாது . மேலும் மனிதனின் மனத்திலிருந்து நல்லுதும் , அழிவதும் கலந்த எண்ணங்களாக உதிக்கின்றன .

உழைக்கும் கரங்கள் , தன்னிடம் ஒப்படைக்கப்பட்ட நல்ல எண்ணங்களுக்கு செயலாக்கம் கொடுக்கிறது . எண்ணங்கள் உதிப்பதற்கு மனமும் , அதைபற்றி சிந்திப்பதற்கு மூளையும், அதற்கு செயல்வடிவம் கொடுப்பதற்கு கரங்களும் மனிதனுக்கு கிடைத்த வரப்பிரசாதமாகும் . என்றாவது தன்னிடம் இப்படிப்பட்ட அற்புதங்கள் இருப்பதை மனிதன் சிந்தித்ததுண்டா . சில சமயம் தன்மீது கொண்டுள்ள அபார நம்பிக்கையால், மனிதன் தெரியாமல் அழிவை தரக்கூடிய எண்ணத்திற்கு செயல் வடிவம் கொடுத்து பிரச்சனையில் சிக்கித் தவிக்கிறான் . துன்பத்தில் தத்தளிக்கும் போது மனிதன் , தவறான பாதையின் கடைசிக் கட்டமான அழிவின் விளிம்பிற்கு வந்தடைகிறான் . அப்போது ஆன்மிகம் அவனை இருட்டிலிருந்து வெளிச்சத்திற்கு கொண்டு வருகிறது . மனிதன் வாழ்க்கை சாகரத்தில் பிரச்சனையால் மூழ்கும் போது இந்த ஆன்மீகமானது அருமையான துடுப்பாக பயன்படுகிறது .

மனிதன் பிரச்சனைக்கு தீர்வு காண்பதற்கு ஆன்மீகத்தின் மூன்று வழிகளான பக்தி மார்க்கம் , கர்ம மார்க்கம் , ஞான மார்க்கம் ஆகியவற்றில் எதையாவது ஒன்றை தேர்ந்தெடுத்துக் கொள்கிறான் . மனதை அங்குமிங்கும் அலைபாய விடாமல், சிந்தனையை ஒருநிலைபடுத்தி மனிதன் சமநிலையை இழக்காமல் வந்திருக்கும் இன்னல்களை தைரியத்தோடும் , விவேகத்தோடும் சந்திக்கிறான் . மனிதனுக்குள் ஒரு சக்தி அடங்கி இருக்கிறது . ஒரு சகதிக்குள் மனிதன் அடங்கி இருக்கிறான் . இதுவல்லவா" மனிதம் கடவுளின் அற்புதப் படைப்பாகும் ."

No comments:

Post a Comment