Monday 3 May 2010

மனிதம் , கடவுளின் அற்புதப் படைப்பு -பாகம் -2

இந்த உலகத்தில் ஆசையில்லாத மனிதனை தேடுவது வெறும் வெத்து வெட்டான காரியமென்று சொல்லலாம் . உலகத்திலுள்ள அனைத்து உயிருள்ள ஜீவராசிகளுக்கும் எண்ணற்ற ஆசைகளைக் கொடுத்து கடவுள் படைத்திருக்கிறார் . ஆசையில்லாத மனிதன் உயிரற்ற ஜடத்திற்கு சமமாக கருதப்படுகிறான் . கடவுள் என்பவர் ஒவ்வொரு ஜீவனுக்கும் உயிர் கொடுக்கும் போது ஆசை என்ற கலவையை சேர்த்து உருவாக்குகிறார் . இந்த ஆசைகளை நிறைவேற்றி கொள்ள ஒவ்வொரு மனிதனும் சுதந்திரமாக செயல்பட எண்ணுகிறான் . அவன் இந்த உலகத்தில் ஜனித்தவுடன் சுதந்திரமாக சுவாசிக்க ஆசைப்படுகிறான் . அவனுடைய பிறப்பிலிருந்து தொடங்கிய இந்தச் சின்ன சின்ன ஆசையானது எவ்வித தடையுமின்றி வளர்ந்து கொண்டே செல்கிறது . மனிதன் தன்னுடைய எண்ணற்ற ஆசைகளுக்கு வடிகால் கொடுக்க சுதந்திரமாக செயல்பட முற்படுகிறான் . மனிதனுடைய வாழ்க்கையில் இந்த சுதந்திரம் என்ற வார்த்தை என்ன மகத்துவத்தை பெறுகிறது ? மனிதன் சுதந்திரமாக செயல்படுகிறான் என்பதை எவ்வாறு அறிய முடியும் ? எவ்வித தடைகளின்றி அனைத்து இச்சைகளையும் நிறைவேற்றிக் கொள்பவனை சுதந்திர மனிதன் என்று சொல்ல முடியுமா ? அதாவது , மனிதன் வாழ்க்கையில் சுதந்திரத்தை அனுபவிக்கிறான் என்று சொல்லலாமா ?

மனிதனுடைய உடலுக்குள் இருக்கும் அனைத்து உறுப்புகளிலும் மிக முக்கியமானது துடித்துக் கொண்டிருக்கும் இதயமாகும் . இந்த இதயத்தில் வண்ண வண்ண கனவுகளை ஏந்திக் கொண்டு , அதனை நிறைவேற்றுவதற்கு தன்னம்பிக்கை என்ற துடுப்பையும் பெற்றுக் கொண்டு பிறக்கிறான் . மேலும் தன்னுடைய ஆசைகளை பூர்த்திச்செய்து கொள்ள சுதந்திரம் என்ற கருவியை பயன்படுத்துகிறான் . சுதந்திரம் என்ற கருவியும் , தன்னம்பிக்கை என்ற துடுப்பும் அவனுடைய ஆசைகளை நிறைவேற்றுகின்றன . உதாரணத்திற்காக அவன் இன்று நீலநிற சட்டையை அணிய விரும்புகிறான் . காலையில் தோசைக்கு பதிலாக ரொட்டியை சாப்பிட ஆசைப்படுகிறான் . இன்றைய பொழுதை பணியிடத்திற்கு செல்லாமல் தன்னுடைய இல்லத்தில் கழிக்க ஆசைப்படுகிறான் . இன்று காதலித்த பெண்ணை சந்திக்க ஆசைப்படுகிறான் . இப்படி அவனுக்குள் இருக்கும் இத்தனை ஆசைகளும் எவ்விதத் தடையுமின்றி நிறைவேற்றப்படுகின்றன . அப்படிஎன்றால் அவன் சுதந்திரத்தை அனுபவிக்கிறான் என்று சொல்லலாம் . இந்த சுதந்திரம் என்ற கருவி அவனுடைய இதயத்துக்குள் இருக்கும் ஒவ்வொரு ஆசையை எந்தந்த இருப்பிடத்தை பெற்று இருக்கிறதென்று வகுக்க இயலாது . இந்த சுதந்திரம் மனிதனுடைய உயர்வு-தாழ்வு , ஏழை- பணக்காரத் தன்மையை பாகுபடுத்த இயலாது . இந்தச் சுதந்திரம் மனிதனுடைய இதயத்திற்குள் நிரம்பி வழியும் ஆசைகளை மட்டும் பூர்த்தி செய்யும் இயல்பைக் கொண்டது .

சுதந்திரத்தை அனுபவிப்பதற்கு மனிதனுடைய தன்னம்பிக்கை என்ற துடுப்பும் இணைந்து செயல்படுத்தப்பட வேண்டும் . தன்னம்பிக்கை என்பது மனிதனுடைய மனநிலையை குறிக்கிறது . மனமிருந்தால் மனிதன் எதையும் சாதிக்கும் வல்லமையை பெறுகிறான் . மனிதனுடைய மனம் சோர்வடைந்தால் அதாவது அவனுடைய தன்னம்பிக்கை தளர்ச்சி பெற்றால் , அவன் வாழ்க்கையை வெறுக்கத் தொடங்குகிறான் . அவன் விரக்திக்கு உட்படுத்தப்படுகிறான் . அவன் , அனைத்தையும் மறந்த நிலைக்கு தள்ளப்படுகிறான் . அப்போது அவனுடைய வாழ்க்கையில் சுதந்திரத்திற்கு இடமிருக்காது . ஆசைகளில்லாத மனிதனுடைய வாழ்க்கையில் சுதந்திரம் என்ற சொல்லிற்கு இடமிருக்காது . எனினும் , மனிதன் வாழ்க்கையில் எத்தகைய சுதந்திரத்தை அனுபவித்தாலும், இயற்கையின் நியதிகளையும் அவ்வப்போது கடைபிடிக்க வேண்டிய கட்டாயமும் ஏற்படுகிறது . தன்னுடைய பெற்றோர்களை தேர்ந்தெடுக்கும் உரிமை அவனிடம் கிடையாது , அதுபோல குடும்பம் , அவனுடைய நிறம் ஆகியவைகளை தேர்ந்தெடுக்கும் உரிமையும் அவன் பெற்று இருக்க சந்தர்ப்பமிருக்காது . இவையாவும் இயகையிலேயே அமையப் பெற்ற நியதிகள் என்று சொல்லலாம் . இதனை ஒவ்வொரு மனிதனும் முழுமனதோடு ஏற்றுக்கொண்டு தான் வாழ வேண்டும் . அவனுடைய பிறப்போடு பிறந்த ஒரு சில இயற்கையின் நியதிகளை மாற்றிக் கொள்ள முற்பட்டாலும் அத்தகைய உண்மை எளிதில் மாற்றம் பெறக்கூடிய தன்மையை பெறவில்லை . அவன் ஜாதி , மதம் ஆகியவற்றை மாற்றி அமைத்துக் கொண்டு வாழ முடியும் . ஆனால் பிறப்போடு ஜென்மித்த இயல்புகளை ஒருபோதும் மற்ற இயலாது .

எந்த மனிதனும் எல்லை மீறிய ஆசையை நிறைவேற்றிக் கொள்ள முற்படுவதில்லை . அவனுடைய இதயம் ஒரு வட்டத்துக்குள் தன்னை அடிக்கிக் கொண்டு வாழ முற்படுகிறது . ஒரு கணம் அவனுடைய இதயமானது உணர்ச்சிவசத்தால் எல்லை மீறிய ஆசையை அனுபவிக்க முற்படுகிறது என்று வைத்துக் கொள்வோம் . எல்லை மீறிய ஆசையால் ஒரு ஜீவராசி இன்னொரு ஜீவராசிக்கு வேதனை மிகுந்த வலியைக் கொடுக்கிறது . இந்த மாதிரியான மாபெரும் பிழையை எந்த மனிதனின் இதயமும் செய்யத் துடிப்பதில்லை . ஒவ்வொரு மனிதனும் கட்டுப்பாடான வாழ்க்கையை வாழத் தான் முற்படுகிறான் . அவன் தன்னுடைய சுதந்திர உரிமையை இழக்காமல் தன்னம்பிக்கையோடு செயல்பட ஆசைபடுகிறான் . இதுதான் ஒரு சாதாரண மனிதனின் இயல்பான வாழ்க்கை என்று சொல்லலாம் . மனிதனுக்கு இதயம் என்று ஒன்று இருந்தால் அவற்றில் ஆசைகளும் இருக்கும் ,ஆசைகளோடு தான் மனிதனுடைய வாழ்க்கையும் ஓடுகிறது , ஓடும் வாழ்க்கை காலச்சக்கரத்தோடு இணைந்து இயங்கி வருகிறது .

இதுதான் யதார்த்த நிலை . இந்த தர்க்கத்தை உணர முடியாத எந்தவொரு மானுடனும் இந்த உலகத்தில் ஜீவிப்பது அரிது . இதுவல்லவாமனிதம் - கடவுளின் அற்புதப் படைப்பு !!!

No comments:

Post a Comment